தமிழக சட்டமன்றத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்திருந்தது. இருப்பினும், 99 வயதான முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, ஜனநாயகக் கடமையை நேரில் சென்று நிறைவேற்ற விரும்பி முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான ஹண்டேவுக்கு தபால் வாக்கு செலுத்தும் வாய்ப்பு இருந்தும், அவர் அதனைப் பயன்படுத்தவில்லை. “வாக்குச்சாவடி மையத்திற்கே நேரில் சென்று வாக்களிக்க வேண்டும்” என்ற தனது விருப்பத்தின் காரணமாக நேற்று ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பிறகு, தனது விரலில் வைக்கப்பட்ட அடையாள மையைக் காட்டியபடி அவர் உற்சாகமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹண்டேவின் இந்தச் செயலைப் பாராட்டி பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

மிக முக்கியமான ஒரு செய்தி இது. 99 வயதிலும் நேரில் வந்து வாக்களித்த ஹண்டே அவர்களின் ஆர்வம் போற்றத்தக்கது. இவரைப் போலவே இளைஞர்களும் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் இந்தப் பதிவை தமிழ், ஆங்கிலம் மற்றும் வங்காளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட்டு, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.