சென்னை கொளத்தூர் பகுதியில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பூஜா என்ற மூன்று குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பூஜாவிற்கு, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
உணவு டெலிவரி வேலை செய்து வரும் ரவிக்குமார், தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் மனமுடைந்த பூஜா, “அப்பா நல்லவர் இல்லை, அவரை நம்பாதீர்கள்” என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள், தாய் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்தச் சம்பவத்தில் பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரவிக்குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ரவிக்குமார் பூஜாவை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடுவதாகக் கூறி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பூஜாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அதைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மரணத்தில் உள்ள மர்மம் உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும் என்று கூறியுள்ள போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
