மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி என்பவர் மீது 9 கொலை மற்றும் 8 கொலை முயற்சி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது சென்னை சிறையில் இருக்கும் இவரை, வழக்கு விசாரணைக்காகப் புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை மீண்டும் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல் வெள்ளை காளியைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்தச் சூழலில், காவல்துறையினர் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடியைப் பாதுகாத்ததாக ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது காவல்துறையினரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்திற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் இதற்குப் பொறுப்பேற்று வெட்கித் தலைகுனிய வேண்டும் என அதிமுக தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும்போது, சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பிற்கான அப்பட்டமான சான்று என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.
