தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு, அக்கட்சியின் தேசிய அளவில் முக்கியப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் அறிவிக்கப்படவுள்ள தேசிய நிர்வாகிகள் குழுவில் அண்ணாமலைக்கு ‘தேசிய பொதுச் செயலாளர்’ பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை 3 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக உயர்த்தியதற்காக அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றவர் அண்ணாமலை.
இளைஞர்களை முன்னிலைப்படுத்தும் பாஜகவின் புதிய உத்தியின்படி, 41 வயதே ஆன இவருக்கு டெல்லியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதால், அவர் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி, தி.மு.க-வை வீழ்த்த பிரதமர் மோடியும் அமித் ஷாவும் இப்போதே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு ஆக்ரோஷமான தலைவராகவும், பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவராகவும் உருவெடுத்துள்ளதால், அவருக்கு தேசிய அளவில் பதவி வழங்குவது தமிழகத்திலும் கட்சிக்கு கூடுதல் பலத்தைத் தரும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லி அரசியலில் அண்ணாமலை கால் பதிப்பது உறுதியாகியுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
