இந்திய அணியில் தற்போது இடம் பெறாமல் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் , இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒருநாள் கோப்பைத் தொடரில் தனது பந்துவீச்சால் கவனம் ஈர்த்து வருகிறார். நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடி வரும் அவர், தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பிடிப்பதற்கான தனது வாய்ப்பை வலுப்படுத்தி வருகிறார்.
இந்தத் தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள சஹால், 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சோமர்செட் அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் சஹாலின் பந்துவீச்சு தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சஹால் கடைசியாக 2023-ஆம் ஆண்டு விளையாடினார். அதன்பிறகு அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் அவர், தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், சாஹாலின் தற்போதைய ஃபார்ம் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. 15 விக்கெட்டுகளுடன் தொடர்ந்து அசத்தி வரும் அவர், இந்திய அணிக்கான தனது கதவு இன்னும் மூடப்படவில்லை என்பதை தனது பந்துவீச்சின் மூலம் நிரூபித்து வருகிறார். இதனால் சாஹாலுக்கு மீண்டும் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
