பெங்களூருவில் பி.எஸ்சி முடித்துவிட்டு ஒரு வருடம் பணியாற்றிய அனுசுயா என்ற 26 வயது இளம்பெண், தனது காதலன் அவினாஷை கடந்த 2025 நவம்பரில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கலபுரகி அருகே உள்ள ஆசாத்பூர் என்ற கிராமத்தில் குடியேறிய அவர், அங்குள்ள கிராமப்புற வாழ்க்கை முறைக்கு மாற முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
நகர வாழ்க்கையின் வசதிகளும், சுதந்திரமும் இல்லாததால் அவர் தொடர்ந்து தனது பெற்றோரிடம் நகரத்திற்குச் செல்ல விரும்புவதாகக் கூறி வந்துள்ளார்.
நகரங்களில் வசிக்கும் தனது சகோதரிகளைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை அடைந்த அனுசுயா, மீண்டும் ஒரு வேலையில் சேர்ந்து பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டார்.
ஆனால், அவரது பெற்றோர் அவரை கணவருடன் கிராமத்திலேயே வாழுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கடும் மன அழுத்தம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனுசுயா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து குல்பர்கா பல்கலைக்கழகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
