உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலில் கண்மூடித்தனமாக மாறிய இளம் பெண் ஒருத்தி, தன் சொந்தக் குடும்பத்திற்கே கோடிக்கணக்கில் துரோகம் இழைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல பித்தளை வியாபாரி முகமது இம்ரான் என்பவரது வீட்டில் கடந்த மே 11, 2026 அன்று அதிகாலையில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவம் ஒன்று நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் மாஸ்டர்மைண்டாகச் செயல்பட்டது வேறு யாருமல்ல, அந்த வியாபாரியின் சொந்த மகள் அரீபா என்பது தெரியவந்தது. அரீபா, அர்ஷத் வார்சி என்ற இளைஞனை கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

இருவருடைய சாதியும் வேறு வேறாக இருந்ததால் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பணத்தோடு வீட்டை விட்டு ஓடிப் போய் புதிய வாழ்க்கையைத் தொடங்கத் திட்டமிட்ட இந்த காதல் ஜோடி, சொந்த வீட்டிலேயே கொள்ளையடிக்கச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக அரீபா ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டின் முதன்மைக் கதவின் சாவியைத் தன் காதலனிடம் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் ஆழமான தூக்கத்தில் இருந்தபோது, அரீபா வீட்டின் டிஜிட்டல் லாக்கை உள்பக்கமாக இருந்து திறந்து கொள்ளையர்களை உள்ளே அனுமதித்துள்ளார்.

துப்பாக்கி முனையில் குடும்பத்தினரை மிரட்டிய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 1.25 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததுடன், சிசிடிவி ஆதாரங்களை அழிக்க அதன் டிவிஆர் கருவியையும் தூக்கிச் சென்றுள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி அரீபா, அவரது காதலன் அர்ஷத் மற்றும் கூட்டாளிகள் 3 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 47 லட்சம் ரூபாய் ரொக்கம், துப்பாக்கிகள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.