ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முகுந்தி திக்வானி கிராமத்தில், மூன்று வயது சிறுமி ஒருவர் அவரது சொந்த தாத்தாவாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மதியம் முதல் காணாமல் போன நிஷா சோரன் என்ற அந்தச் சிறுமியை அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் தீவிரமாகத் தேடி வந்தனர். நள்ளிரவு நேரத்தில், சிறுமியின் தந்தை கிராமத்தில் ஒரு காரியமாகச் சென்றிருந்த போது, அவரது உறவினரான பிரேம் முர்மு என்பவர் ஒரு சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படி நடமாடியுள்ளார்.
கிராம மக்கள் அவரை நிறுத்த முயன்றபோது, அவர் தப்பியோட முயன்று, அந்த மூட்டையைக் கிணற்றுக்குள் வீசியுள்ளார். மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அந்தச் சாக்கு மூட்டையை வெளியில் எடுத்துப் பார்த்தபோது, அதில் காணாமல் போன சிறுமியின் சடலம் இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். பிரேதப் பரிசோதனையில் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கிராம மக்கள், கொலைக் குற்றவாளியான பிரேம் முர்மு மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த ஜெர்மன் சோரன் ஆகிய இருவரையும் ஓட ஓட விரட்டிப் பிடித்து, நடுரோட்டில் வைத்து மரண அடி அடித்துக் கொன்றுள்ளனர். இந்த இரட்டைக் கொலை மற்றும் சிறுமியின் மரணம் குறித்து போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
