கோயம்புத்தூர் மாவட்டம் பொங்காலியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் வேல்முருகன் என்பவரது வீட்டில் தனது மகளுடன் வாடகைக்கு குடி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து 1 1/2 கோடி ரூபாய் பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். இதற்கிடையே வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக பிரியாவிற்கும் வேல்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று பிரியா தனது மகளுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வீட்டின் பூட்டை உடைக்காமல் சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து திருடியது தெரியவந்தது.

இதனால் போலீசார் வீட்டை சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வேல்முருகன் மாற்று சாமியை பயன்படுத்தி வீட்டிற்குள் சென்று பணத்தை திருடியது தெரியவந்தது. இதனால் போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.