அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலேஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரைப் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவமனையின் முக்கிய வாசற்கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியால் கடுமையாகத் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும், அவரது உறவினர்கள் நீண்ட நேரமாக வாசலில் நின்று சத்தமிட்டு அழைத்தும் மருத்துவ ஊழியர்கள் யாரும் வெளியே வந்து பார்க்கவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த உறவினர்கள், மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மற்றொரு நுழைவாயில் வழியாக வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அதற்குள் அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மருத்துவமனை ஊழியர்களின் உதவி எதுவும் கிடைக்காததால், வேறு வழியின்றி அங்கிருந்த வாகன நிறுத்துமிடத்திலேயே உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களது செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தின் உதவியோடு அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துள்ளனர்.

நல்ல வேளையாகப் பிரசவம் சுகப்பிரசவமாக முடிந்து அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னரே அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள், தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

தற்போது இருவரும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அவலம் குறித்துத் துறை ரீதியான தீவிர விசாரணை நடத்தச் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.