ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு இணைய சேவை மையம் நடத்தி வந்த மகிபால் என்ற காமுகன், அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டித் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான்.
மேலும், அவரிடம் இருந்து பணமும் பறித்து வந்த நிலையில், அந்தப் பெண் கடந்த மார்ச் 20-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். தன் அக்காவின் மரணத்திற்கு நீதி கேட்டு, அவரது இளைய சகோதரி கடந்த ஏப்ரல் 11 அன்று காவல்துறையில் மகிபால், சிவராஜ், கோபால் உட்பட 8 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் புகார் அளித்தார்.
தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று அவர் எச்சரித்தும், ஒரு மாதம் கடந்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அக்காவின் ஆபாச வீடியோக்களை பொதுவெளியில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, அந்த நாசகாரக் கும்பல் இளைய சகோதரியையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கடும் விரக்தியடைந்த இளைய சகோதரி, கடந்த வெள்ளிக்கிழமை தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராடியதுடன், விஷம் அருந்தி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இரு சகோதரிகளின் மரணத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு, மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வதாக மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்பொழுது முக்கிய குற்றவாளி மகிபால் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்; மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 6 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
