கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய 17 வயது மகளுக்கு, 18 வயது பூர்த்தியானவுடன் மனைவியின் உறவினருக்குத் திருமணம் செய்து வைக்கக் குடும்பத்தினர் முடிவு செய்து, அதற்கான ஆடைகள் மற்றும் தாலி உள்ளிட்டவைகளையும் வாங்கித் தயாராக வைத்திருந்தனர்.
ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் கடந்த 5 மாதங்களாகக் குடும்பத்தில் கடுமையான தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திம்மராயப்பா, தன் மகளைக் கொலை செய்யத் திட்டமிட்டு, கடந்த மாதம் 16-ஆம் தேதி அவரை ஒரு கிணற்றின் அருகே அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாகக் கிணற்றுக்குள் தள்ளியுள்ளார்.
தண்ணீரில் விழுந்த மகள் தன்னை எப்படிக் காப்பாற்றுமாறு கெஞ்சிய நிலையிலும், இரக்கமின்றி அவர் மீது பெரிய கல்லைத் தூக்கிப்போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மகளின் மரணத்தை உறுதி செய்த திம்மராயப்பா, அவரது உடலைக் கிணற்றில் இருந்து வெளியே எடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்குக் கொண்டு சென்று ரகசியமாகப் புதைத்துள்ளார்.
பின்னர், எதுவுமே தெரியாதது போல் வீட்டிற்கு வந்து சகஜமாக இருந்துள்ளார். கூலி வேலைக்குச் சென்றிருந்த அவரது மனைவி மாலை வீடு திரும்பியபோது மகள் இல்லாததைக் கண்டு பல இடங்களில் தேடியுள்ளார். மகள் கிடைக்காததால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத் திம்மராயப்பாவும் மனைவியுடன் உடன்போயுள்ளார்.
எனினும், போலீசாருக்கு திம்மராயப்பாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது, அவரே தன் மகளைக் கொடூரமாகக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த விபரீதக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
