மேற்கு வங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஹிங்கல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான ரேகா பத்ரா, அப்பகுதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றை அதிரடியாக வழிமறித்துச் சோதனையிட்டுள்ளார்.

இதையடுத்து லாரி ஓட்டுநரிடம், “14 வயதுக்கு உட்பட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்; எனவே, நீங்கள் ஏற்றிச் செல்லும் இந்த பசுக்களின் பிறப்புச் சான்றிதழை எங்களிடம் காட்ட வேண்டும், இல்லாவிட்டால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் உங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைஎடுக்கப்படும்” என்று கூறி ஓட்டுநரை மிரட்டியுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த வினோதமான கோரிக்கை குறித்துத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. குணால் கோஷ் கடுமையான நையாண்டியுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இரட்டை எஞ்சின் ஆட்சி (பாஜக ஆளும் மாநிலம்) நடக்கும் இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில், ஒரு பசுவிற்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழைப் பெற்று வந்து காட்டுமாறு மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்; அது எதிர்காலச் சான்றுகளுக்கு உதவியாக இருக்கும். பாஜகவினால் அப்படி ஒரு பசுவின் பிறப்புச் சான்றிதழைக் காட்ட முடிந்தால், அந்தச் சான்றிதழ்களுக்கு யார் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளார் என்பதை நாங்கள் சரிபார்க்க ஆவலாக உள்ளோம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.