தமிழக மின்சார வாரியத்தின் தற்போதைய ஒட்டுமொத்த நிலைமை, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடந்த கால செலவினங்கள் குறித்த மிக முக்கியமான “வெள்ளை அறிக்கை” நாளை (ஜூன் 25) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடி வெள்ளை அறிக்கையை தமிழக எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நாளை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார்.
மின்சார வாரியம் கடந்த சில ஆண்டுகளாகவே பல லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்து வரும் சூழலில், இந்த அறிக்கை வெளியாக இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், உச்சக்கட்ட பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த வெள்ளை அறிக்கை வெளியிடும் பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த அறிக்கையில், மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள அசுரத்தனமான நஷ்டங்கள், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் உள்ள விபரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு செலவுகள் உள்ளிட்ட அனைத்து உண்மைகளும் மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்படவுள்ளன.
குறிப்பாக, முந்தைய ஆட்சி காலத்தில் மின்சாரத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேட்டுப் புகார்கள் குறித்தும் இதில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், நாளை காலை வெளியாகவுள்ள இந்த அறிக்கை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்று நோக்க வைத்துள்ளது.
