யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று உணவு விமர்சனம் (Food Review) செய்யும் வ்லோகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஒட்டுமொத்த நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனிமேல் உணவு பாதுகாப்புத்துறையின் முறையான உரிமம் (License) வைத்துள்ள உணவு கடைகளில் மட்டுமே யூடியூபர்கள் ஃபுட் ரிவியூ செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், வீடியோ எடுப்பதற்கு முன்பாக அந்த ஹோட்டலில் உரிமம் இருக்கிறதா, அவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா, அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கைகுறி (Gloves) மற்றும் தலையுறைகளை (Hairnet) அணிந்துள்ளனரா என்பதை எல்லாம் யூடியூபர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
மேலும், அந்த உணவகங்களில் வழங்கப்படும் குடிநீர் சுத்தமாக இருக்கிறதா, பரிமாறப்படும் உணவு தரமான முறையில் உள்ளதா என்பதை எல்லாம் தீர ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழக உணவு பாதுகாப்புத்துறையின் இந்த அதிரடி உத்தரவு, கண்ட மேனிக்கு ஹோட்டல்களைப் புகழ்ந்து தள்ளும் ஃபுட் ரிவியூவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதோடு, பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நல்லதொரு முயற்சி என சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் வரவேற்கப்பட்டு செம ட்ரெண்டாகி வருகிறது.
