கொரோனா காலத்தில் குடும்பம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தபோது, பலர் போல மனம் தளராமல் தனது ஆர்வத்தையே ஆயுதமாக மாற்றிக் கொண்டவர் 19 வயதான ஆயுஷ் சிங். வெறும் லேப்டாப், சீரற்ற இணைய வசதி மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருந்த நிலையில், அவர் சுயமாக Machine Learning மற்றும் Artificial Intelligence தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
மேலும் சில மாதங்களிலேயே வெளிநாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பணியாற்றும் அளவுக்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டார். 14 வயதிலேயே அவர் உருவாக்கிய AI பாடநெறிக்கு MIT போன்ற உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பாராட்டும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிறகு NLP Systems உருவாக்குதல், Data Scientist மற்றும் MLOps Engineer ஆக பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களைப் பெற்ற ஆயுஷ் சிங், பின்னர் தனது சொந்த AI சார்ந்த முயற்சிகளை தொடங்கினார். தற்போது AI தொடர்பான பிரீமியம் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் கோர்ஸ்கள் மூலம் மாதத்திற்கு சுமார் ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் IIT அல்லது MIT போன்ற உயர்கல்வி பட்டங்கள் இல்லாமலேயே, சுய கற்றல், தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில் முனைவு சிந்தனை மூலம் இளம் வயதிலேயே பெரிய வெற்றியைப் பெற்றுள்ள அவரது பயணம், இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக மாறியுள்ளது.
