குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கால்வாய் ஒன்றில் இருந்து சாந்திகிரி கோஸ்வாமி என்ற லாரி டிரைவரின் சடலம் மீட்கப்பட்டது. அப்போது உள்ளூர் போலீசார் இதனைச் சாதாரண விபத்து மரணம் என வழக்கை முடித்தனர். ஆனால், அகமதாபாத் கிரைம் பிராஞ்ச் போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலால், இந்த வழக்கைக் கையில் எடுத்த 2 பிஎஸ்ஐ மற்றும் 10 போலீசார் அடங்கிய அதிரடிப் படை, 2 மாதங்களாகப் புலனாய்வு செய்து இந்த அதிர்ச்சியூட்டும் கொலை வழக்கின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சாந்திகிரியின் மனைவி ஜாக்ருதி கோஸ்வாமி (50) மற்றும் அவளது முக்கியக் காதலன் காந்திலால் (54) ஆகியோரைக் கைது செய்தபோதுதான், ஜாக்ருதியின் பகீர் கள்ளக்காதல் வலை அம்பலமானது. ஜாக்ருதிக்கு முதலில் சுக்தேவகிரி என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்தனர். ஆனால், சில காலத்திலேயே தனது கணவனின் அண்ணனான சாந்திகிரி மீது ஆசைப்பட்டு, குழந்தைகளையும் முதல் கணவனையும் விட்டுவிட்டு அவருடன் ஓடிவந்து இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டாள்.
சாந்திகிரி லாரி ஓட்டச் சென்றுவிட்டால் 20 நாட்கள் வீட்டிற்கு வரமாட்டார். இந்தத் தனிமையைப் பயன்படுத்தி, பக்கத்து வீட்டு காந்திலாலுடன் ஜாக்ருதிக்கு 3-வது காதல் மலர்ந்துள்ளது. தங்களின் காதலுக்கு இடையூறாக இருந்த 2-வது கணவனான சாந்திகிரியைப் போட, யூனிஸ் என்ற கூலிப்படைக்கு 25,000 ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், அந்த கூலிப்படை நபர், தூங்கும் சாந்திகிரியைப் போட்டோ மட்டும் எடுத்து அனுப்பிவிட்டு, கொன்றுவிட்டதாகப் பொய் சொல்லி பணத்தைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான்.
மறுநாள் காலையில் கணவன் உயிரோடு டீ குடிப்பதைப் பார்த்துக் கடுப்பான ஜாக்ருதியும், அவளது காதலன் காந்திலாலும் சேர்ந்து, சாந்திகிரியின் கழுத்தை நெரித்தும், முகத்தில் தலையணையை வைத்தும் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் சடலத்தை மறைக்க, ஜாக்ருதி தனது 4-வது காதலனான தீபக் என்பவனுக்குப் போன் போட்டு வரவழைத்தாள். ஜாக்ருதிக்காக எதையும் செய்யத் துணிந்த தீபக், தனது நண்பனின் காரை வாங்கி வந்து, சாந்திகிரியின் சடலத்தை ஏற்றிச் சென்று கால்வாயில் வீசியுள்ளான்.
பின்னர், கணவனுக்குத் தூரத்து ஊரில் நல்ல வேலை கிடைத்துவிட்டதாக ஊருக்குள் கதையைக் கட்டியுள்ளனர். தற்போது போலீசாரின் அதிரடி வேட்டையில் ஜாக்ருதி, காந்திலால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4-வது காதலன் தீபக் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதில் உச்சக்கட்ட சோகம் என்னவென்றால், ஜாக்ருதியின் முதல் கணவன், தனது இரு குழந்தைகளோடு, ஜாக்ருதிக்கும் அவளது இரண்டாவது கணவனான (சாந்திகிரி) அண்ணனுக்கும் பிறந்த மற்றொரு குழந்தையையும் சேர்த்து வளர்த்து வருவது நெஞ்சை உலுக்குகிறது.
