வழக்கறிஞர் ஒருவரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், “சில வேலையற்ற இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போலவும், ஓட்டுண்ணிகளைப் போலவும் சமூக ஊடகங்களில் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்” என்று பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதியின் இந்த ‘கரப்பான்பூச்சி’ விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 2020 டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே என்பவர் விளையாட்டாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

இது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை என்றாலும், ’மதச்சார்பற்ற – சோசலிச – ஜனநாயக – சோம்பேறி’ என்ற விசித்திரமான கொள்கையோடு இளைஞர்களுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு கேளிக்கை இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது. ​ஆனால், ஆச்சரியப்படும் விதமாக இந்த மீம்ஸ் கட்சி உருவான சில தினங்களிலேயே சுமார் 40,000 பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும், இதன் அதிகாரப்பூர்வ ‘X’ (ட்விட்டர்) பக்கத்தை 15,000-க்கும் மேற்பட்டோர் பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.

இந்த வேடிக்கையான கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோரே விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தை ஆடிப்போக வைத்துள்ளது. வெறும் மீம்களுக்காகத் தொடங்கப்பட்டாலும், நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு மோசடிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும், தங்களின் முதல் மெய்நிகர் ‘GenZ’ மாநாட்டை நடத்தப் போவதாகவும் இக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. இது வெறும் நெட்டிசன்களின் அரசியல் பரிசோதனையா அல்லது மாஸ் கட்சியாக மாறுமா என்று சோசியல் மீடியாவே உற்றுநோக்கி வருகிறது.