லக்னோ அருகே உள்ள ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பிரபல ‘சன்பீம் பள்ளி’ (Sunbeam School), கல்வியை வியாபாரமாக்கி வரும் அவலம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு படிக்கும் யுகேஜி மாணவனின் தாய் நீலம் வர்மா என்பவர், பள்ளி குறிப்பிட்ட கடையிலேயே புத்தகங்களை வாங்கியுள்ளார். ஆனால், நோட்டுகளை பள்ளியிலேயே தான் வாங்க வேண்டும் என்று நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது. இது குறித்து கேள்வி கேட்கச் சென்ற அந்தப் பெண்ணிடம், பள்ளியின் முதல்வர் மம்தா மிஸ்ரா மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

​அந்தத் தாயை ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல், “எதிர்த்துப் பேசினால் உன் குழந்தையின் பெயரை பள்ளியில் இருந்து நீக்கிவிடுவேன்” என்று முதல்வர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “தனியார் பள்ளிகள் டிரஸ் மற்றும் புத்தகங்களின் பெயரில் கமிஷன் வாங்குவதையே தொழிலாகக் கொண்டுள்ளன” எனப் பெற்றோர் தரப்பு கொந்தளிக்கிறது. இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.