பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், ஆட்டோவில் அமர்ந்தபடி லஞ்சம் வாங்கும் வீடியோ இப்போது இணையத்தில் பெரும் கிண்டலுக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. 44 டிகிரி வெயில் கொளுத்தும் வேளையில், டபுள் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் அந்த அதிகாரி, ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பாவம் அந்த ஆட்டோ ஓட்டுநரோ, “மேடம், ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஒரு 100 ரூபாய் குறைச்சுக்கிட்டு 400 ரூபாயாவே எடுத்துக்கோங்க” என கெஞ்சுகிறார்.

​இந்தக் காட்சியை யாரோ வீடியோ எடுத்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட, அது இப்போது வைரலாகி வருகிறது. “பீகார் போலீஸே.. இந்த மேடத்துக்கு சம்பளத்தை கொஞ்சம் ஏத்தி கொடுங்க, பாவம் 500 ரூபாய்க்கு எல்லாம் இப்படி பேரம் பேசுறாங்க” என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். “சம்பளம் அக்கவுண்டிலேயே இருக்கும், இதுதான் அவர்களுக்கு மெயின் வருமானம் போல” என்றும், “போலீஸிடம் நடவடிக்கை எடுப்போம் என்று பதில் வரும், ஆனால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது” என்றும் மக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.