பீகார் மாநிலம் கட்டிகாரில் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மிகக் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தான் நோயுற்று இருப்பதாகவும், விடுமுறை வேண்டும் என்றும் அவர் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அந்த அதிகாரியோ, ஊழியரின் பேச்சை நம்பாமல் நோய்க்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.

​இதனால் வேறு வழியில்லாத அந்த ஊழியர், கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையிலேயே (Drip), தன் கணவரின் துணையோடு தள்ளாடியபடி அதிகாரியின் முன் ஆஜராகியுள்ளார். கையிலேயே டிரிப்ஸ் பாட்டில் மாட்டப்பட்டு, உடல் நடுங்கிய நிலையில் அவர் வந்த அந்த வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. “ஒரு நோயாளியிடம் கூட ஆதாரத்தைக் கேட்கும் அளவுக்கு அதிகாரிகளின் மனசாட்சி மரத்துப்போய்விட்டதா?” என நெட்டிசன்கள் இந்தச் சம்பவத்தைப் பார்த்து கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.