உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில் நடந்த ஒரு திருமண விழாவில், மணப்பெண் எடுத்த துணிச்சலான முடிவு இப்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. திருமணத்திற்கு வந்த மணமகன், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, மணமேடைக்கு வரும்போதே தள்ளாடி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண், “இப்படிப்பட்ட ஒருவருடன் என்னால் வாழ முடியாது” எனத் திருமணத்தை அங்கேயே நிறுத்தினார்.

​தொடர்ந்து கண்ணீருடன் பேசிய அந்தப் பெண், “மாப்பிள்ளை வீட்டார் ஸ்கார்பியோ கார் உட்படப் பல வரதட்சணை கோரிக்கைகளை வைத்தனர்; என் குடும்பமும் அவற்றை நிறைவேற்றியது. ஆனால், தனது காலிலேயே நிற்கத் துப்பில்லாத ஒருவன், எப்படி என் வாழ்க்கையைப் பாதுகாப்பான்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மணப்பெண் அழுதுகொண்டே பேசும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “தவறான நபரிடம் சிக்காமல் சரியான நேரத்தில் முடிவெடுத்த இந்த மணப்பெண்ணுக்குப் பெரிய சல்யூட்” என நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.