மேகலாயாவிற்குத் தேனிலவு சென்ற இடத்தில் கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்த வழக்கின் முதன்மை குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேகலாய மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வராலே அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றம் சோனமுக்கு வழங்கிய ஜாமீன் உத்தரவை ரத்து செய்து, வழக்கு விசாரணை நடைபெற்று வரும் இந்தச் சூழலில் அவர் தொடர்ந்து வெளியில் இருப்பது விசாரணையைப் பாதிக்கக் கூடும் என்று தெரிவித்தது.
முன்னதாக, கைது நடவடிக்கையின் போது காவல்துறை வழங்கிய ஆவணங்களில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கொலைக்கான பிரிவு 103-க்கு பதிலாகத் தவறாகப் பிரிவு 403 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நடைமுறை பிழையைக் சுட்டிக்காட்டி விசாரணை நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தன.
ஆனால், அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது வெறும் எழுத்துப் பிழை மட்டுமே என்றும், குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், முந்தைய ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையைச் சுட்டிக்காட்டி ஜாமீனை ரத்து செய்தது.
இந்த உத்தரவின்படி, சோனம் ரகுவன்ஷி இன்னும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கீழ்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிவடையாவிட்டால், சோனம் மீண்டும் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய விலக்கு அளிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
