நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், இதற்கு முழுப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரி டெல்லியில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காக்ரோஜ் பார்ட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் நடத்தி வரும் இந்தத் தொடர் போராட்டத்திற்குக் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினரின் மூலம் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதரவுக் குரல்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அறிவித்ததும், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் ஏற்கனவே இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தன.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த பிரபல நடிகை கௌரி கிஷன், டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்தில் நேரடியாகக் களமிறங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மாணவர்கள் நடத்தும் இந்த அமைதிப் போராட்டத்திற்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இது தொடர்பான புகைப்படங்களை அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் பலரும் வெறும் சமூக வலைதளப் பதிவுகளுடன் கடந்து செல்லும் சூழலில், ஒரு இளம் நடிகை நேரில் சென்று மாணவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட நிகழ்வு தற்போது தேசிய அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழில் ’96’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து ‘மாஸ்டர்’ போன்ற பிரம்மாண்டப் படங்களிலும், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகப் படங்களிலும் நடித்துத் தனது திறமையை நிரூபித்துள்ள கௌரி கிஷனின் இந்தத் துணிச்சலான சமூக அக்கறை நடவடிக்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் கல்விச் சிக்கல்களுக்கு எதிராகத் திரைத்துறை நட்சத்திரங்கள் களமிறங்குவது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கௌரி கிஷனின் இந்தப் போராட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.