குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பாதியில் நிறுத்திய 18 வயது வாலிபர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி 121 போலி வங்கிச் செயலிகளை உருவாக்கிய குற்றத்திற்காகச் சூரத் நகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பெயர்களில் அச்சுஅசலாக வடிவமைக்கப்பட்ட இந்த போலி செயலிகள் மூலமாக, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சுமார் ₹64.38 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சைபர் குற்றப் பிரிவு விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 18 வயது இளைஞர், ஏஐ கருவிகளின் உதவியுடன் மிகவும் துல்லியமாக உண்மையான வங்கிச் செயலிகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி கோப்புகளை உருவாக்கியுள்ளார். பின்னர், இந்த போலி செயலிகளை டெலிகிராம் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பரப்பி, கடன் சலுகைகள் மற்றும் வங்கிச் சேவைகளை எளிதாகப் பெறலாம் எனக் கூறி மக்களைப் பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார்.

பயனர்கள் தங்கள் வங்கி பயனர் பெயர், கடவுச்சொல் மற்றும் OTP போன்ற ரகசியத் தகவல்களை இந்த போலி செயலிகளில் உள்ளீடு செய்தவுடன், அத்தகவல்கள் குற்றவாளியின் கைக்குச் சென்று, அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

சூரத் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த இளைஞரைக் கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற பிரம்மாண்டமான நிதி மோசடிகள் நடத்தப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வத் தளங்களில் இருந்து மட்டுமே வங்கிச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை ஒருபோதும் நிறுவக் கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

“>