ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம், நீலகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாடணா கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் கிராம மக்களை உறைய வைக்கும் திகில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுக்கரடி ஒன்று, கிராமத்திற்குள் புகுந்து நெத்ரானந்தா சாஹூ என்பவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்துள்ளது.
அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டிற்குள் கரடி உலாவுவதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு வீட்டிலிருந்து வெளியேறித் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் பரவியதும், கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல் பயமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், கரடி புகுந்த வீட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு வளையத்தை அமைத்தனர். கரடியைக் கூச்சல் போட்டு உசுப்பேத்த வேண்டாம் என்றும், பாதுகாப்பான தூரத்தில் விலகி இருக்குமாறும் அப்பகுதி மக்களுக்குப் வனத்துறையினர் அறிவுறுத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வீட்டின் உள்ளேயே அமர்ந்திருந்த கரடியை, காயமின்றிப் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதேபோல், ஒடிசாவின் அங்குல் மாவட்டத்திலும் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்த கரடியை ஊர்மக்கள் பல மணி நேரம் போராடிக் கயிற்றின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், கிணற்றை விட்டு வெளியே வந்த அந்தச் சூட்டோடு, தன்னை மீட்டு எடுத்த ஊர்மக்களையே அந்த கரடி துரத்தத் தொடங்கியதால் அங்கு பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
சமீபகாலமாக வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், கிராம மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
