இன்றைய நவீன உலகில் சிறு நகரங்கள் முதல் பெருநகரங்கள் வரை வீதிகளுக்கு வீதி வண்ண வண்ணப் போக்குவரத்துச் சிக்னல்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், வாகன நெரிசலில் மக்கள் மணி கணக்கில் சிக்கித் தவிப்பது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. ஆனால், உலகிலேயே ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஒரு போக்குவரத்துச் சிக்னல்   கூட கிடையாது. சிக்னல்களே இல்லாத நிலையிலும் அங்குப் போக்குவரத்து நெரிசலோ, தேவையற்ற விபத்துகளோ இல்லாமல் வாகனங்கள் மிகவும் நேர்த்தியாகச் சென்று வருகின்றன என்பதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் உண்மை.

இத்தகைய தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ள நாடு வேறு எதுவுமில்லை, நம் பக்கத்து நாடான பூட்டான் தான். இத்தேசத்தின் தலைநகரான திம்பு உட்பட நாடு முழுவதிலும் எந்தவொரு முக்கியச் சந்திப்பிலும் இயங்கி வரும் நவீன டிராஃபிக் லைட்டுகளைக் காண முடியாது. இயந்திர சிக்னல்களுக்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சி பெற்ற போக்குவரத்துப் போலீஸார் அலங்கரிக்கப்பட்ட சிறு சாவடிகளில் நின்று, தங்களின் கைசைகை  மூலமாகவே வாகனங்களை மிகவும் திறம்படக் கட்டுப்படுத்தி வழிநடத்துகின்றனர்.

உண்மையில், கடந்த 1990-களின் இறுதியில் தலைநகர் திம்புவில் முதன்முறையாகச் சோதனை முறையில் டிராஃபிக் சிக்னல்கள் நிறுவப்பட்டன. ஆனால், அங்கிருந்த மக்களுக்கு இயந்திரங்கள் வழிகாட்டுவதை விட, மனிதர்களின் நேரடி வழிகாட்டுதலும், சைகை மூலமான தொடர்பும்தான் மிகவும் வசதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது. இயந்திரக் கட்டுப்பாட்டை விரும்பாத மக்கள், அதிகாரிகளிடம் முறையிட்டதால் சில நாட்களிலேயே அந்தச் சிக்னல் விளக்குகள் அகற்றப்பட்டு, மீண்டும் காவலர்களே நியமிக்கப்பட்டனர்.

மொத்த தேசிய மகிழ்ச்சிக்கு  முன்னுரிமை அளிக்கும் பூட்டான் அரசு, இயந்திரங்களை விட மனித தொடர்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், கட்டுப்பாடான ஓட்டுநர் பயிற்சி, சாலைகளில் கடைப்பிடிக்கப்படும் பரஸ்பர மரியாதை மற்றும் நிதானமான வேக வரம்பு ஆகியவற்றின் காரணமாகவே இங்குச் சிக்னல்கள் இல்லாவிட்டாலும் போக்குவரத்து சீராக இயங்குகிறது. நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்கும் உலகிற்கு, மனித அமைப்பும் ஒழுக்கமும் இருந்தால் நெரிசலை வெல்லலாம் என்பதற்கு பூட்டான் ஒரு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.