காலம் எவ்வளவு வேகமாகச் சக்கரத்தைச் சுழற்றுகிறது என்பதற்கு இந்திய அரசியல் வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உண்டு. ஆனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவம், காலம் செய்த விசித்திரமான விளையாட்டு என்றே சொல்லத் தோன்றுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தார்மீகப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்கள் நாடு முழுவதும் எதிரொலித்து வருகின்றன.

ஆனால், இந்த எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் நடுவே ஒளிந்திருக்கும் ஒரு வரலாற்று உண்மை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைக்கு எந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோருகிறார்களோ, சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பாக, இதே போன்ற ஒரு வினாத்தாள் கசிவு சம்பவத்தை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராடியவர்தான் இந்த தர்மேந்திர பிரதான்!
கடந்த 1980-களின் இறுதியில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் தீவிரமான தலைவராக தர்மேந்திர பிரதான் வலம் வந்த காலம்.

அப்போது நிகழ்ந்த ஒரு தேர்வு வினாத்தாள் கசிவு ஊழலை எதிர்த்து அவர் தலைமையில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கொடூரமான தடி அடியில் கடுமையாகக் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு, மாணவர் உரிமையைக் காக்கக் களத்தில் நின்றவர்.

அவர் அன்று மாணவர் தலைவராக நின்று வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், கல்வித்துறையின் சீர்கேடுகளுக்கு எதிராகவும் ரத்தம் சிந்திப் போராடிய அதே தர்மேந்திர பிரதான், இன்றைக்கு நாட்டின் கல்வி அமைச்சராகப் பொறுப்பிலிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைக்கு அதே வினாத்தாள் கசிவுப் புகாரில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, கோடிக்கணக்கான மாணவர்களின் கேள்விகளுக்கும் போராட்டங்களுக்கும் பதிலளிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார். காலம் மாற்றியமைத்த இந்த விசித்திரமான சூழல், இந்திய அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.