ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் ஆர்.உதயகிரி பிளாக்கிற்கு உட்பட்ட ரன்லை கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான ஜக்கரியா பால் என்பவருக்கு, அரசு அதிகாரிகளின் ஒற்றைப் பிழையால் பெருந்துயரம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​பாதிக்கப்பட்ட ஜக்கரியா பால், ரேஷன் கடையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மற்றும் பொருட்களைப் பெறச் சென்றபோதுதான் இந்த கொடூர உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ரேஷன் கடையில் கைரேகை வைத்து ஆன்லைன் ஆதார் சரிபார்ப்புச் செய்தபோது, அரசுப் பதிவேடுகளில் அவர் ‘இறந்துவிட்டார்’ எனக் காட்டப்பட்டதால், அவரது ஆதார் எண் தானாகவே செயலிழக்கச் செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது.

​முறையான மற்றும் செல்லுபடியாகும் ஆதார் அட்டை அவரிடம் இருந்தபோதிலும், அரசு ஆவணங்களில் அவர் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டதால், ரேஷன் திட்டம் மட்டுமன்றி, ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டிருந்த அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் அவர் முற்றிலும் முடக்கப்பட்டார்.

​இந்த விவகாரம் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, கஜபதி மாவட்ட ஆட்சியர் அக்சய் சுனில் அகர்வால் இது குறித்து நேரில் விளக்கம் அளித்துள்ளார். ஜக்கரியா பாலின் தம்பி சமீபத்தில் காலமான நிலையில், அவரது ஆதார் எண்ணை முடக்குவதற்குப் பதிலாக, அதிகாரிகளின் தவறால் ஜக்கரியா பாலின் ஆதார் எண் முடக்கப்பட்டு விட்டதாகத் தனது நிர்வாகத் தவறை ஆட்சியர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

​மேலும், இந்தத் தவறை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், புவனேஸ்வரில் உள்ள முதன்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஜக்கரியா பாலின் ஆதார் எண் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். அதிகாரிகளின் ஒரு சிறிய கவனக்குறைவு, உயிரோடு வாழும் ஒருவரை காகிதத்தில் பிணமாக்கி, அவரது வாழ்வாதார உரிமைகளைப் பறித்த இச்சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.