சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் சர்வதேச அளவில் பிரபலங்களின் கவனத்தையே ஈர்த்துவிடும். அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர் சாஹில் குப்தா வெளியிட்ட ஒரு சுவாரசியமான வீடியோ, இப்போது உலகம் முழுதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தன் உடல் எடையைக் குறைக்க அவர் விடுத்த விசித்திரமான சவாலும், அதற்கு உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கொடுத்த பதிலும்தான் இணையவாசிகளின் தற்போதைய ஹாட் டாபிக்.

மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரரும், நோர்வே நாட்டின் முன்னணி கால்பந்து வீரருமான எர்லிங் ஹாலண்டின் தீவிர ரசிகர் சாஹில் குப்தா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் எனது இந்த வீடியோவில் கமெண்ட் செய்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் எனது உடலிலிருந்து 20 கிலோ எடையைக் குறைத்துக் காட்டுகிறேன்!” என சவால் விடுத்திருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sahil Gupta (@sahilgptgo)

அந்த வீடியோவை மேலும் சுவாரசியமாக்கும் வகையில், எர்லிங் ஹாலண்டின் நிஜ அளவிலான  அட்டைப் படத்தைத் தயார் செய்த சாஹில், அதை மும்பையின் புகழ்பெற்ற கருப்பு-மஞ்சள் ஆட்டோவில் ஏற்றி ஊர் சுற்றினார். அத்துடன் நின்றுவிடாமல் உணவகம், உடற்பயிற்சிக் கூடம் என தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்த கட்-அவுட்டையும் கூடவே எடுத்துச் சென்று வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றினார். இந்த வித்தியாசமான முயற்சி மிக விரைவாகப் பல லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலானது.

இளைஞரின் இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அந்த வீடியோவிற்கு சாட்சாத் எர்லிங் ஹாலண்டே நேரடியாகப் பதிலளித்தார். தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து,  இப்போதே தொடங்குங்கள் என அவர் கமெண்ட் செய்ய, அந்தப் பதிவு ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீ போல் பரவியது. நட்சத்திர வீரரே நேரடியாகப் பதிலளித்ததால், வாக்குறுதி அளித்தபடி தனது 20 கிலோ எடைக் குறைப்புப் பயணத்தை மிகுந்த உற்சாகத்துடன் சாஹில் குப்தா தற்போது தொடங்கியுள்ளார்.