ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 வயதான சர்க்கஸ் கலைஞர் டிஃபனி ஃபீல்ட், காற்றில் வெறும் கழுத்தின் உதவியோடு தொங்கியபடி அதிக நேரம் சுழன்று புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இவர் காற்றில் தொடர்ச்சியாக 3 நிமிடங்கள் 1.18 வினாடிகள் சுழன்று இந்த அபார சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்கக் கலைஞர் ஒருவர் 1 நிமிடம் 10 வினாடிகள் சுழன்றதே உலக சாதனையாக இருந்த நிலையில், டிஃபனி அதை மிகப்பெரிய இடைவெளியில் முறியடித்து வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளார். சர்க்கஸ் உலகில் கழுத்தின் ஆதாரத்தை மட்டும் கொண்டு காற்றில் சுழல்வது என்பது மிக ஆபத்தான, உயிரைப் பணயம் வைக்கும் ஒரு சாகசமாகும்.
இதில் சிறிய தவறு நடந்தாலும் கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்பு கூட ஏற்படக்கூடும். டிஃபனிக்கு 2025-ஆம் ஆண்டு ஒரு நேரலை நிகழ்ச்சியின் போது காலில் பலத்த காயம் ஏற்பட்டு, பெரிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த சாதனை முயற்சியின் போது கூட அவரது வலது காலில் முழுமையான உணர்ச்சி திரும்பியிருக்கவில்லை. இருப்பினும், வலி மற்றும் உடல்நலச் சவால்களைப் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய மன உறுதியும் தன்னம்பிக்கையும் இந்த சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது.
பல ஆண்டுகள் கடுமையான பயிற்சி, உடல் சமநிலை மற்றும் தொழில்முறைத் திறன் இருந்தால் மட்டுமே இத்தகைய கடினமான சாகசங்களைச் செய்ய முடியும். சர்க்கஸ் துறையில் எண்ணற்ற விபத்துகளையும் சவால்களையும் கடந்து, தனது லட்சியத்தை அடைந்துள்ள டிஃபனி ஃபீல்டின் இந்த கின்னஸ் சாதனை, உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு மற்றும் சாகசக் கலைஞர்களுக்குப் பெரும் ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.
