பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் சேவை நிறுவனமான ‘நோபுரோக்கர்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித் குமார் அகர்வால், தனது அலுவலகத்திற்குள் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வழக்கமாக நிறுவனங்களில் காலாண்டு இலக்குகளை எட்டும்போது கேக் வெட்டியோ அல்லது மின்னஞ்சல் அனுப்பியோ வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால், நோபுரோக்கர் அலுவலகத்தில் இலக்கை அடைந்த கொண்டாட்டம் மிகவும் வித்தியாசமாகவும் கலகலப்பாகவும் அமைந்தது.

அலுவலகத்தின் நடைபாதையிலேயே அமித் அகர்வால் புத்தம் புதிய ஸ்கூட்டரை ஓட்டிச் செல்ல, அதைக் கண்ட ஊழியர்கள் உற்சாகக் கூச்சலிட்டு, கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வித்தியாசமான கொண்டாட்டத்தின் பின்னணியில் அவர்களின் அணியின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. நோபுரோக்கரின் ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ பிரிவு அணி, இந்த காலாண்டில் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடினமான இலக்கை வெற்றிகரமாக எட்டியது.

அவர்களின் இந்தச் சாதனையைப் பாராட்டி பல பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், அதில் மிக முக்கியப் பரிசாக இந்த ஸ்கூட்டர் இருந்தது. அமித் அகர்வால் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “அன்று எனக்கு மிகவும் முக்கியமான ஒரு பணி கொடுக்கப்பட்டது அது ஸ்கூட்டர் ஓட்டுவதுதான்!” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

ஊழியர்கள் தங்களின் முழு உழைப்பையும் செலுத்தி ஒரு கடினமான இலக்கைச் சாத்தியமாக்கும்போது, அதை வெறும் முறையான விருது வழங்கும் விழாவோடு முடித்துவிடக் கூடாது என்பது அகர்வாலின் கருத்தாகும். சலிப்பூட்டும் உரைகளை ஆற்றுவதற்குப் பதிலாக, இதுபோன்ற கலகலப்பான நிகழ்வுகள் மூலமே ஊழியர்களை உண்மையிலேயே உற்சாகப்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார்.

“>