மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போதும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களுக்கும், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் ‘லைக்’ வாங்குவதற்காகவும், ரீல்ஸ் செய்வதற்காகவும் இளைஞர்கள் தங்களது உயிரையே அடகு வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கோபோலி பகுதியில், நீர்வீழ்ச்சி ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் சிலர் செய்த நெஞ்சைப் பதறவைக்கும் சாகசக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் அந்த வீடியோவில், மிக உயரமான ஒரு நீர்வீழ்ச்சிக்கு நடுவே, தண்ணீர் கொட்டும் பகுதிக்கு பின்புறம் உள்ள ஒரு குறுகிய பாறை இடுக்கில் சிலர் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஒரு சிறு தவரோ, அல்லது கால் நழுவலோ ஏற்பட்டால் கூட அவர்கள் பல நூறு அடி ஆழத்தில் விழும் அபாயம் உள்ளதை அந்த வீடியோ காட்டுகிறது. அதுமட்டுமின்றி, மற்றொரு வாலிபர் செங்குத்தான ஒரு மலைப் பகுதியை நோக்கி ஆபத்தான முறையில் ஏற முயல்வதும், அதனைப் படம் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை எச்சரித்துத் தடுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரின் அடிவாரத்தில், மும்பை-புனே விரைவுச்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதனால், வார இறுதி நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் மும்பை மற்றும் புனே நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தத் தற்காலிக நீர்வீழ்ச்சிகளை ரசிக்க இங்கு திரள்வது வழக்கம். இந்த வீடியோ வெளியான அதே வேளையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்து எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலங்களில் மலைப் பாதைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, வழுக்கும் பாறைகள் மற்றும் நிலச்சரிவு போன்ற ஆபத்துகள் நொடிப் பொழுதில் நிகழக்கூடும் என்பதால், நீர்நிலைகள் மற்றும் உயரமான மலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைத் துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். வானிலை எந்த நேரத்திலும் மோசமடையலாம் என்பதால், தங்களது உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் இத்தகைய சாகசங்களைச் சுற்றுலாப் பயணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.