கொரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கலாச்சாரம் பெரிய அளவில் பரவியது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐடி ஊழியர்கள் பலரும் கஃபேக்களில் அமர்ந்து வேலை செய்யும் ‘வொர்க் ஃப்ரம் கஃபே’ என்ற புதிய டிரெண்டை உருவாக்கி வருகின்றனர். ஒரு கப் காபியை வாங்கிக்கொண்டு, அங்கிருக்கும் வைஃபை வசதியைப் பயன்படுத்தி மணி கணக்கில் லேப்டாப்பில் வேலை செய்வதும், மீட்டிங் நடத்துவதும் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சாதாரணமாகிவிட்டது. இந்த நிலையில், பெங்களூரு இந்திரா நகரில் உள்ள ஒரு பிரபல கஃபே, இவ்வாறு டேபிள்களை ஆக்கிரமிக்கும் வாடிக்கையாளர்களுக்குச் செக் வைக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தக் கஃபேயின் புதிய விதிமுறையின்படி, அங்கு அமர்ந்து வேலை செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், தாங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளுக்கான கட்டணம் தவிர, கூடுதலாக ஒரு மணி நேரத்திற்கு தலா 99 ரூபாய் ‘வொர்க்ஸ்பேஸ் வாடகை’ செலுத்த வேண்டும். இந்த அதிரடி அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களிடையே பெரும் மகா விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளவாசிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து தங்களது கருத்துகளை மோதவிட்டு வருகின்றனர்.
உணவகத்தின் முடிவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர், “வெறும் 150 ரூபாய்க்கு ஒரு காபியை வாங்கிவிட்டு 5 முதல் 6 மணி நேரம் வரை டேபிளை ஆக்கிரமிப்பது அந்த உணவகத்தின் வியாபாரத்தைப் பெருமளவில் பாதிக்கும். உண்மையாகச் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு இதனால் அமர இடமில்லாமல் போகிறது. எனவே கஃபேயின் முடிவு நியாயமானதுதான்” என்று வாதிடுகின்றனர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாகப் பேசும் மற்றொரு தரப்பினரோ, “கஃபேக்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் 2, 3 மணி நேரத்திற்குள் போதிய அளவு உணவுகளை ஆர்டர் செய்துவிடுகிறார்கள். யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் விதிப்பது போல் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது” என்று சாடுகின்றனர்.
இந்தியாவில் இப்படி நேரத்திற்கு ஏற்பக் கட்டணம் வசூலிப்பது இது முதல் முறையல்ல; தற்போது நாட்டின் பல நகரங்களில் ‘டைம் கஃபே’ அல்லது ‘என்ட்ரி கஃபே’ என்ற புதிய வர்த்தகக் கலாச்சாரம் பிரபலமடைந்து வருகிறது. உதாரணமாக, புனேயில் உள்ள ‘மௌஜி டைம் கஃபே’யில் வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவுக்குப் பணம் கொடுப்பதில்லை, மாறாக அங்கு செலவிடும் நேரத்திற்கு மட்டுமே பணம் செலுத்துகின்றனர்; அங்கு வைஃபை, டீ மற்றும் காபி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
அதேபோல் கொச்சியில் உள்ள ‘ஜிவிக்யூ டைம் கஃபே’யில் முதல் ஒரு மணி நேரத்திற்கு 150 ரூபாயும், அதன் பிறகு நிமிடத்திற்கு 1 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், பெங்களூரு கஃபேக்கள் நேரடியாகக் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக ‘லேப்டாப் இல்லாத பகுதி’ அல்லது ‘ஸ்கிரீன் இல்லாத நேரம்’ போன்ற மாற்று வழிகளை யோசிக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
