திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பொன்விழா நகரில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் சன்னியாசி என்பவரது வீட்டில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்னியாசி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் நிலையில், சுத்தமல்லி வீட்டில் அவரது மாமனார் மாரி மற்றும் 70 வயது மாமியார் ஆண்டிச்சி ஆகியோர் தங்கியிருந்தனர்.
மேலும் கடந்த 8-ம் தேதி மாரி வெளியே சென்றிருந்த நேரத்தில், குடிநீர் கேட்பது போல வீட்டிற்குள் நுழைந்த இரு மர்ம நபர்கள், தனியாக இருந்த மூதாட்டி ஆண்டிச்சியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு வாயைப் பொத்தி சித்திரவதை செய்துள்ளனர். மூதாட்டி அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த தங்க நகைகள் என மொத்தம் 25 சவரன் நகைகளையும், 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனால் கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 26 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. தப்பிச் செல்லும் முன் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
