தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி அஜித்தா அக்னல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் வெற்றிச் சின்னமான ‘விசில்’ சின்னத்தை முறைப்படி அறிமுகம் செய்த அஜித்தா, அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். தவெக-வின் இந்தக் களப்பணி தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்கை உறுதிப்படுத்துவதோடு, அடிமட்டத் தொண்டர்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மக்களிடையே உரையாற்றிய அஜித்தா அக்னல், தற்போதைய ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தின் தீராதப் பிரச்சனைகளான மழைநீர் தேக்கம் மற்றும் நீண்டகாலமாக வழங்கப்படாமல் இருக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் போன்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

“>

 

“கடந்த 15 ஆண்டுக்கால ஆட்சியில் செய்யாத பணிகளை, இப்போது அவசர அவசரமாகச் செய்து வருவதற்கு ஒரே காரணம், தளபதி விஜய் ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என்ற பயம்தான்” என்று அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறியவர்கள், தற்போது தேர்தல் பயத்தால் மட்டுமே செயல்படுவதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.