மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். முதலில் பிதாநகர் பகுதியில் நடைபெறுவதாக இருந்த இந்த நிகழ்ச்சி, கடைசி நேரத்தில் பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது. இடமாற்றத்தால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பங்கேற்றனர். மாநில அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே இந்த இடமாற்றத்திற்குக் காரணம் எனப் புகார் எழுந்தது. மேலும், ஜனாதிபதியை வரவேற்க முதல்வர் மம்தாவோ அல்லது அமைச்சர்களோ நேரில் செல்லவில்லை என்பதும் சர்ச்சையானது. இது குறித்து ஜனாதிபதி முர்முவே தனது உரையில் வேதனையுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “திரிணாமுல் காங்கிரஸ் அரசு எல்லை மீறிச் செயல்பட்டு வருகிறது. நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி அவமதிக்கப்பட்டதற்கு மாநில நிர்வாகமே பொறுப்பு. இது மிகவும் வெட்கக்கேடானது. பழங்குடியின சமூகப் பின்புலத்திலிருந்து வந்துள்ள ஜனாதிபதி முர்மு வெளிப்படுத்தியிருக்கும் வேதனையானது, இந்திய மக்கள் அனைவர் மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது; அதன் மாண்பு காக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் குற்றச்சாட்டுக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: “இந்த மாநாடு ஒரு தனியார் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனாதிபதியை வரவேற்கச் சிலிகுரி மேயர் மற்றும் காவல் ஆணையர் நேரில் சென்றனர். மாவட்ட நிர்வாகத் தரப்பில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. பாஜக தனது அரசியல் லாபத்திற்காக நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவரைத் தவறாகப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி வருகையை ஒட்டி மேற்கு வங்கத்தில் வெடித்துள்ள இந்த அரசியல் போர் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
