மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் எலிகள் நடமாடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஜபல்பூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையின் வார்டுகளில் எலிகள் சுதந்திரமாகத் திரிந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தற்போது சத்னாவிலும் இத்தகைய அவலநிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் மிக உயர்ந்த சுகாதாரப் பாதுகாப்பு தேவைப்படும் பச்சிளம் குழந்தைகள் பிரிவிலேயே எலிகள் உலா வருவது, அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் தூய்மை குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்கள் மத்தியப் பிரதேசத்தில் நிலவும் மோசமான சுகாதாரப் பராமரிப்பு நிலையைத் தோல் உரித்துக் காட்டுகின்றன.

“>

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் எலிகள் கடித்ததால் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த துயரம் இன்னும் மறையாத நிலையில், அடுத்தடுத்து இத்தகைய புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அலட்சியப் போக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.