மெக்சிகோவில் புதிதாகத் தொடங்கப்பட்ட ‘ட்ரென் லிகெரோ ரயில் சேவையின் தொடக்க விழாவில், அந்த நகரத்தின் மேயர் ஹெரார்டோ குயிரினோ வெலாஸ்குவெஸ் சரியான நேரத்திற்கு வராததால் தொடக்க ரயிலைத் தவறவிட்ட சுவாரசியமான நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்திற்கு மேயர் சற்று தாமதமாக வந்தபோது, ஏற்கனவே அதிகாரிகள் மற்றும் விருந்தினர்களுடன் ரயில் குறித்த நேரத்திற்குப் புறப்பட்டுவிட்டது.
மேலும் நடைமேடையில் ஓடிச்சென்று ரயிலைப் பிடிக்க முயன்றும் அவரால் முடியாத நிலையில், ரயிலும் நிற்காமல் சீராகச் சென்றது. இந்தச் சம்பவத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்ட மேயர், “கவலைப்படாதீர்கள் மக்களே, ஒன்பது நிமிடங்களுக்கு ஒருமுறை அடுத்த ரயில் வரும்” என்று நகைச்சுவையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுப் போக்குவரத்து சேவையின் துல்லியமான நேரத்தைப் பாராட்டினார்.
¡No se preocupen, mi gente! 😅 Pasa cada 9 minutos. 🤙 pic.twitter.com/IMQP75OkvL
— Gerardo Quirino (@GerardoQuirinoV) December 16, 2025
“>
இந்தச் சம்பவம் இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய நெட்டிசன்கள் இதை இந்தியாவின் ‘விஐபி கலாச்சாரத்துடன்’ ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். “மெக்சிகோவில் மேயர் தாமதமாக வந்தாலும் ரயில் குறித்த நேரத்திற்குப் புறப்படுகிறது, ஆனால் இந்தியாவில் அமைச்சர்கள் வரும்வரை ரயில்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் “இந்தியாவில் ஒருவேளை ஓட்டுநர் ரயிலை எடுத்துச் சென்றிருந்தால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பார்” என்று இந்திய அரசியல் கலாச்சாரத்தைச் சாடும் வகையில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. காலந்தவறாமை மற்றும் விஐபி முன்னுரிமை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த ஒப்பீடு தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
