உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சோன்பர்சா கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் மிஸ்ரா என்ற 48 வயது ஆட்டோ ஓட்டுநர், தனது 24 வயது மனைவி லட்சுமியைத் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் மிஸ்ரா ஏற்கனவே பல குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடந்த நிலையில், இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் இருந்துள்ளது.

லட்சுமியின் கையில் பி.எல் மற்றும் ஜி.பி.எல் என்று இரண்டு பச்சை குத்தல்கள் இருந்துள்ளன. இதில் ஜி என்ற எழுத்து யாரைக் குறிக்கிறது என்று பிரதீப் தொடர்ந்து சந்தேகத்துடன் கேட்டு வந்துள்ளார். அதற்கு லட்சுமி, அது உங்களது செல்லப் பெயரான குட்டு என்பதைக் குறிக்கிறது என்று விளக்கியும், அதனை ஏற்க மறுத்த பிரதீப் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

தனது திட்டத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது சகோதரி வீட்டிற்குச் சென்ற பிரதீப், குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு மனைவியை மட்டும் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோ பழுதாகிவிட்டதாகக் கூறி இறங்கிய அவர், மறைத்து வைத்திருந்த மஃப்லரால் லட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க லட்சுமியின் முகத்தைச் சிதைத்துவிட்டு உடலை ஒரு தோட்டத்திற்குள் மறைத்து வைத்துள்ளார். முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், லட்சுமியின் கையில் இருந்த அந்தப் பச்சை குத்தல்களை வைத்தே போலீசார் கொலையுண்டவர் யார் என்பதைக் கண்டறிந்தனர். இதன் மூலம் குற்றவாளி பிரதீப் மிஸ்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது மனைவியைக் கொலை செய்ய அந்தப் பச்சை குத்தலே காரணமாக இருந்த நிலையில், அதே பச்சை குத்தலால் குற்றவாளி பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.