இந்திய டி20 அணியில் தனது 15 வது வயதிலேயே இடம்பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே இவர் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு நான்கு போட்டிகளில் விளையாடியபோதும் பெரியளவில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறினார். இருப்பினும், சோர்ந்துபோகாமல் தனது திறமையை மெருகேற்றிக் கொண்ட இந்த இளம் வீரர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தனது அசல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஜிம்பாப்வே தொடரில் அபாரமாக விளையாடிய அவர், இரண்டு அரைசதங்களுடன் மொத்தம் 151 ரன்களைக் குவித்து அசத்தினார். குறிப்பாக, முதல் போட்டியில் வெறும் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் மின்னல் வேகத்தில் 50 ரன்களை விளாசினார். தொடர்ந்து 2-வது போட்டியில் 9 பந்துகளில் 20 ரன்களும், கடைசிப் போட்டியில் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 81 ரன்களும் குவித்து மிரட்டினார். இத்தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றதுடன், கடைசிப் போட்டியில் பந்துவீச்சின் போது கேட்ச் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய அர்ப்பணிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேச பொருளானது.

இளம் வீரரின் இந்த ஈடுபாடு குறித்துப் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் வி.வி.எஸ். லக்ஷ்மண், வைபவ் சூர்யவன்ஷி தனது ஒட்டுமொத்த உடற்தகுதியை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் ஓடிவந்து டைவிங் கேட்ச் பிடிக்க முயன்று காயமடைந்த நிலையிலும் கூட, அணியின் நலனுக்காகத் தொடர்ந்து களத்தில் இருக்கவே அவர் விரும்பியதாக லக்ஷ்மண் பெருமிதத்துடன் கூறினார். இளம் வயதிலேயே ஐபிஎல் போன்ற பெரிய மேடைகளில் விளையாடிய அனுபவமும், அழுத்தங்களைச் சமாளித்துச் செயல்படும் முதிர்ச்சியும் வைபவிடம் இயற்கையாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சதம் அடிக்கத் தவறியது வைபவிற்குச் சிறிய ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், இது அவருக்கு முதல் அல்லது கடைசி வாய்ப்பு அல்ல என்று அணியின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வைபவ்விற்கு முன்பு மிக நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை காத்திருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் தன்னை மெருகேற்றிக் கொள்ளும் மனப்பான்மை அவரிடம் இருப்பதாகவும் லக்ஷ்மண் புகழாரம் சூட்டினார். எதிர்காலத்தில் சர்வதேச அளவில் கிரிக்கெட் உலகின் அத்தனை சாதனைகளையும் வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பார் என்றும், அதற்கான அத்தனை ஆற்றலும் திறமையும் அவரிடம் உறுதியாக உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.