மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் மராத்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மராத்தி பேசத் தெரியாததால் தனது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மும்பை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக மும்பை வந்த ஏழை ஓட்டுநர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மராத்தி தெரியாவிட்டால் 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், 10,000 முதல் 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுவதால், தினக்கூலிகளான தங்களால் அவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாது என அந்த ஓட்டுநர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

படிப்பறிவு குறைவாக உள்ள கிராமப்புற மக்கள் ஒரே மாதத்தில் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்றும், அதற்காகத் தங்களுக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். தனது குடும்பத்தைக் காப்பாற்றப் பசியைத் தணிக்க வெளியே வந்த இடத்தில், கண்ணீரே மிஞ்சியதாக அவர் இயலாமையோடு கூறியது பலரையும் கலங்க வைத்துள்ளது.

இந்தக் காணொளி வெளியானது முதல் இணையத்தில் மொழி மற்றும் பிராந்தியவாதம் குறித்துப் பெரும் விவாதம் வெடித்துள்ளது. ஒரு மாநிலத்தில் வேலை செய்யத் தனி மொழி நிபந்தனை விதிப்பது சாதாரண உழைப்பாளிகளின் உரிமையைப் பாதிப்பதாகவும், இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் பல நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை இத்தகைய ஓட்டுநர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மும்பை காவல்துறையைக் குறியிட்டு “மகாராஷ்டிரா மராத்தி மக்களுக்கு மட்டுமானதா அல்லது ஒட்டுமொத்த இந்தியாவிற்குமானதா?” என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.