மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மின்சாரத் துறையின் வல்லபநகர் மண்டல உதவிப் பொறியாளரான ரவிகாந்த் மால்வியா, தனது பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும், ரவிகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஏராளமான ஊழியர்களும், அவரது ஆதரவாளர்களும் மின்சார விநியோக நிறுவன அலுவலகத்தில் கூடினர். மேள தாளங்கள் முழங்க, அவரை யானை மீது ஏற்றி அரசு அலுவலகத்திற்குள் அழைத்து வந்தனர்.
அலுவலக வளாகத்திற்கு வெளியே ஊழியர்கள் நடனமாடிக் கொண்டாடிய நிலையில், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேக் ஒன்றையும் அவர் வெட்டினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, மக்களிடையே கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளன.
அரசு அலுவலகத்தில் இத்தகைய ஆடம்பரமான கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாகத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் வி.கே. மால்வியா விளக்கம் அளித்துள்ளார். அரசுத் துறை வளாகத்திற்குள் இதுபோன்று பிறந்தநாள் கொண்டாடுவது தவறான செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் அரசு அலுவலகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர் ரவிகாந்த் மால்வியாவுக்குத் துறை ரீதியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
