தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு இடையே, தவெக உறுப்பினர்களின் பேச்சு மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் அவையில் பெரும் கூச்சலையும், பரபரப்பையும் ஏற்படுத்தின. சட்டப்பேரவையில் பேசிய தவெக உறுப்பினர் முஸ்தபா , வஃக்பு சட்டத்திற்கு எதிராக அன்றைய தவெக தலைவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இஸ்லாமிய மக்களைப் பாதுகாத்ததாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்களை முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுகவினர், தங்களை ‘முஸ்திம் தீவிரவாதிகள்’ எனத் திட்டுவதாகக் குற்றம்சாட்டினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் தன்னைத் தீவிரவாதி என்று முத்திரை குத்துவதாகக் கூறி, அவர் அவையிலேயே கண்ணீர் விட்டுப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பேசிய ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தாஹிரா, முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று கூறியது இந்த திமுகவினர்தான் என்றும், இதை யாராலும் மாற்ற முடியாது என்றும் காரமாகப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
என்னது தீ**வாதியா? த.வெ.க எம்.எல்.ஏ சொன்ன ஒரே ஒரு வார்த்தையால் ஒட்டுமொத்தமாக ஆவேசமாகி எழுந்த தி.மு.க உறுப்பினர்கள்.. அடிப்பது போல் பாய்ந்து வந்தவர்களை போராடி தடுத்த எ.வ.வேலு – சட்டப்பேரவையை பரபரப்பில் ஆழ்த்திய அந்த 8 நிமிடங்கள்#TNAssembly | #JCDPrabhakar | #DMK | #ADMK |… pic.twitter.com/HkhaGrPzYE
— Polimer News (@polimernews) August 25, 2026
அவையில் நிலைமை கைமீறிச் செல்லும் வகையில் ஒரு திமுக எம்.எல்.ஏ கையை ஓங்குவது போல் எழுந்ததால் பரபரப்பு உச்சத்தை அடைந்தது. உடனடியாக குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், “இது போன்ற உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று ஆவேசமாகக் கூறினார்.
இதற்கிடையில், திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் உடனடியாகச் சபாநாயகரிடம் சென்று இதுகுறித்து முறையிட்டார். இதனைக் பரிசீலித்த சபாநாயகர், “சபையில் இதுபோன்ற வார்த்தைகளைப் பேசி மாண்பைக் குறைக்க வேண்டாம்; தாஹிரா பேசிய அந்த குறிப்பிட்ட சொற்களை அவை குறிப்பிலிருந்து நீக்குகிறேன்” என்று உத்தரவிட்டார். இந்த விவகாரம் காரணமாகச் சட்டப்பேரவையில் சுமார் எட்டு நிமிடங்கள் வரை கடுமையான அமளியும், கூச்சலும் நிலவியது குறிப்பிடத்தக்கது.
