திருவள்ளூர் அருகே உள்ள சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்ற ரூபன் (வயது 33). இவர் மீதுள்ள ஒரு குற்ற வழக்கு தொடர்பாக,  காவல் நிலையத்தில் வழக்கம்போலக் கையெழுத்திட்டுவிட்டு தனது நண்பர் வெங்கடேத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் எதிரே வந்த காரில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், மாரியின் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி கீழே தள்ளியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

கொலை செய்துவிட்டுத் தப்பியோட முயன்ற அந்த கும்பலின் கார், சாலையோரமாக இருந்த வீட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனே சுதாரித்துக் கொண்ட பொதுமக்களும், அப்பகுதி மக்களும் விரட்டிச் சென்று அந்த காரில் இருந்த 3 பேரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

எனினும், காரில் இருந்த மற்ற இருவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய அந்த இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கொல்லப்பட்ட மாரியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.