திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் – சத்தியா தம்பதியரின் 6 வயது மகன் சோமநாத். சிறுவன் வீட்டிற்கு வெளியே வழக்கம் போல் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, விளையாடுவதற்காக வைத்திருந்த பலூனை எதிர்பாராதவிதமாகச் சிறுவன் திடீரென விழுங்கியுள்ளான். இதனால் அந்த பலூன் அவனது தொண்டைப் பகுதியில் போய் அப்படியே மாட்டிக்கொண்டது.

தொண்டையில் பலூன் சிக்கியதால் சிறுவனால் சுவாசிக்க முடியாமல் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் நிலைகுலைந்த சிறுவன் சோமநாத், பெற்றோர் கண் முன்னே மயங்கி கீழே விழுந்தான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்டு உடனடியாகச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.