தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷம் போன்ற சில முக்கிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் தற்போது தை மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலுக்கு பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 6-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய திருநாளான தை அமாவாசை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்தும் சதுரகிரி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் வனத்துறையினர் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதாவது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனைக்கு பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை ஏதேனும் பெய்தால் பக்தர்கள் மலையேறி செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
