பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பிரபலமான எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் மாணவர் விடுதியில், அறையில் தங்கி படித்து வந்த முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யாதவேந்திர ஷாகு (வயது 19) என்ற மாணவர், கடந்த ஆண்டு மருத்துவக் கல்விக்காக எய்ம்ஸ் பாட்னாவில் சேர்ந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக யாதவேந்திர ஷாகுவின் அறை திறக்கப்படாமல் இருந்ததால், அதே விடுதியில் இருந்த மற்ற மாணவர்களிடம் சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மாணவர் படுக்கையில் பரிதாபகரமாக சடலமாகக் கிடந்தார்.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து சாட்சியங்களை சேகரித்து வருகின்றனர். மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது இது ஏதேனும் கொலை சம்பவமா என்ற கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எய்ம்ஸ் பாட்னா நிர்வாகம் மற்றும் மருத்துவமாணவர்கள் மத்தியில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் நிலவுகிறது.
