ஓமனின் ஹொர்முஸ் நீரிணை அருகே பயணித்துக் கொண்டிருந்த ‘எம்.டி. செட்டபெல்லோ’என்ற சரக்குக் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் அந்தப் பலாவ் நாட்டுப் கொடியுடன் கூடிய கப்பலில் மொத்தம் 24 இந்தியர்கள் இருந்தனர்.
மேலும் ஈரானில் இருந்து எண்ணெய் கொண்டு சென்றதன் மூலம் அமெரிக்காவின் தடையை மீறியதாகக் கூறி, அமெரிக்க மத்திய கட்டளையகம் கப்பலின் இயந்திர அறை மீது இந்தத் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகள் ஓமன் நாட்டுப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், முதலில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 3 இந்தியர்களும் தற்போது உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா சர்மா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த சிவானந்த் சௌராசியா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் பட்நாலா சுரேஷ் என்பவரும் இதில் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விரைவாக தாய்நாட்டிற்கு கொண்டு வரவும், மீட்கப்பட்ட மற்ற மாலுமிகளைப் பத்திரமாக தாயகம் அனுப்பவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
