பொதுவாக மருத்துவமனைகளில் தீவிர அறுவை சிகிச்சை நடக்கும் போது, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து முழுமையாக தூங்க வைப்பதே வழக்கம். ஆனால், மூளையில் கட்டிகள் அல்லது நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்குச் செய்யப்படும் சில ஆபத்தான அறுவை சிகிச்சைகளின் போது, நோயாளியை விழித்திருக்க வைத்துப் பாட்டுப் பாடவோ அல்லது பேசவோ சொல்லி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதை நாம் கேள்விக்பட்டிருப்போம்.

கேட்கவே விசித்திரமாக இருக்கும் இந்த நடைமுறையின் பின்னணியில் மிகப்பெரிய மருத்துவ அறிவியல் ஒளிந்திருப்பதாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ உலகில் இந்த முறைக்கு ‘அவேக் க்ரேனியோடமி’   என்று பெயர். மனித மூளையானது உடல் இயக்கம், பேச்சு, ஞாபக சக்தி, இசை உணர்வு போன்ற பல முக்கியமான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தின் தலைமைச் செயலகமாக செயல்படுகிறது.

மூளையில் உள்ள கட்டிகளை அகற்றும் போது, அதற்கு மிக அருகில் இருக்கும் ஆரோக்கியமான நரம்புகளுக்கோ அல்லது பேச்சு மற்றும் இசை உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதிகளுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மருத்துவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அறுவை சிகிச்சையின் போது நோயாளி பாட்டுப் பாடும் போதோ அல்லது பேசும் போதோ, மூளையின் எந்தப் பகுதி இயங்குகிறது என்பதை மருத்துவர்களால் உடனுக்குடன் கண்காணிக்க முடியும்.

ஒருவேளை கட்டி இருக்கும் இடத்தைத் தொடும் போது நோயாளியின் குரலில் மாற்றமோ, பாடுவதில் தடுமாற்றமோ அல்லது பேச்சில் தடையோ ஏற்பட்டால், அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்வதை மருத்துவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்வார்கள். இதன் மூலம் நோயாளியின் பேசும் திறனோ, இசைத் திறனோ அல்லது உடல் இயக்கமோ வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுகிறது.

நம் உடலின் பிற உறுப்புகளைப் போல மூளையில் வலி உணரும் நரம்பு நுனிகள்   நேரடியாகக் கிடையாது என்பதால், மண்டையோட்டைத் திறந்த பிறகு மூளைப் பகுதியில் கை வைக்கும் போது நோயாளிக்கு வலி தெரியாது. எனவே, நோயாளியைப் பதற்றமின்றி வைத்துக்கொண்டு, அவரது மூளையின் முக்கியமான செயல்பாடுகளைப் பாதுகாப்பாகக் கண்டறியவே இந்த விசித்திரமான ஆனால் மிகவும் துல்லியமான உத்தியை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.